Hospital Overview

தொடர் விக்கலால் அவதிப்பட்ட (HICCUP) பொறியியல் கல்லூரி மாணவர் மூளையில் இருந்த கட்டி அகற்றம்

Date : 1st Jun 2016

சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் (வயது 20) வகுப்பு அறையில் வாந்தி எடுத்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு கை மற்றும் கால் யயலிழக்க தொடங்கியது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. 15 நாட்களாக அவருக்கு தொடர்ந்து விக்கல் இருந்தது. இதனால் அவர் சரியாக பேச முடியாமலும், உணவு விழுங்க முடியாமலும் சிரமப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சேலம் 3 ரோட்டில் உள்ள நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் முகுளம் எனப்படும் பகுதியில் கட்டி இருப்பதை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நடராஜன் கண்டுபிடித்தார். பின்னர் டாக்டர் நடராஜன் தலைமையில் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சேகர் ஆகியோர் அந்த வாலிபருக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றினர்.

இது குறித்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நடராஜன் கூறியதாகவது:-

விக்கல் என்பது வேக வேகமாக உணவு சாப்பிடுவதாலும், வேகமாக தண்ணீர் குடிப்பதாலும், மூளையில் கட்டி மற்றும் நரம்பு நோய்களினால் ஏற்படும் ஒரு உபாதையாகும். சாதாரணமாக தானாகவே விக்கல் அடங்கி விடும் என்றாலும் ஒரு சில சமயங்களில் தொடர் விக்கலை சரி செய்ய அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இந்த மாணவருக்கு மூளை கட்டியால் ஏற்பட்ட தொடர் விக்கல் மற்றும் கை கால் செயல் இழப்பு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு விக்கல் நின்றதோடு, கை கால்கள் சரியாக வேலை செய்யத் தொடங்கி அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். இவ்வாறு டாக்டர் நடராஜன் கூறினார்.